வாஷிங்டன்,
உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்த உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.1 சதவீத பங்குகளை வாங்கினார்.
அதை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 43 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.10 லட்சம் கோடி) கொடுத்து வாங்கி கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது.
ஆனால் அதை ஏற்க மறுத்த டுவிட்டர் நிர்வாகம் எலான் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும் பின்னர் டுவிட்டர் நிறுவனம் தனது முடிவை மாற்றிக்கொண்டது. இதை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாக குழு எலான் மஸ்குடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.36 லட்சம் கோடி) விற்க டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியுமான பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் நிறுவன ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பராக் அகர்வால் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. டுவிட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.