வாஷிங்டன்
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை எடுத்து வருவதாக டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் எதிரியாக கருதப்படும் சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏற்கனவே பருத்த உடலமைப்பை கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நான்சி கவலை தெரிவித்துள்ளார்.
சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் நமது ஜனாதிபதி, விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தை தற்காப்புக்காக அவர் எடுக்க மாட்டார் என்று நான் விரும்புகிறேன் என்றார். குறிப்பாக அவரது வயதுடையவர்கள், அதுவும் பருத்த உடல் அமைப்பை கொண்ட அவர் குறித்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல என்று நான் நினைக்கிறேன் என்றார்.
2019 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பில், ஜனாதிபதி டிரம்ப் உடல் பருமன் அதிகம் கொண்டவர் எனவும் ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.இந்த மருத்துவக்குறிப்பை சுட்டிக்காட்டியே சபாநாயகர் நான்சி பெலோசி தற்போது டொனால்டு டிரம்பை விமர்சித்துள்ளார்.
மட்டுமின்றி ஜனாதிபதியின் கூற்றுக்குப் பின்னர் அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.