உலக செய்திகள்

பர்வேஸ் முஷரப் நிச்சயமாக ஒருபோதும் துரோகியாக இருக்க முடியாது -பாகிஸ்தான் ராணுவம்

பர்வேஸ் முஷரப் நிச்சயமாக ஒருபோதும் துரோகியாக இருக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 76). இவர் 2007-ம் ஆண்டு அதிபராக இருந்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக முஷரப் மீது, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

முஷரப் மீது மார்ச் 31, 2014 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் தாக்கல் செய்தது. இருப்பினும், மேல்முறையீட்டு மன்றங்களில் வழக்கு காரணமாக முன்னாள் இராணுவ சர்வாதிகாரி முஷரப் வழக்கு நீடித்து வந்தது. அவர் மார்ச் 2016 இல் பாகிஸ்தானை விட்டு வெளியேறி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை. தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தேசதுரோக வழக்கில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

துபாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முஷரப், ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில், நிச்சயமாக முஷரப் ஒருபோதும் துரோகியாக இருக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் ஊடகப் பிரிவான (ஐ.எஸ்.பி.ஆர்) கூறி உள்ளதாவது;-

ஒரு முன்னாள் ராணுவத் தலைவர், முன்னாள் பாகிஸ்தான் அதிபர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு சேவை செய்தவர், நாட்டின் பாதுகாப்பிற்காக போர்களை நடத்தியவர், நிச்சயமாக ஒருபோதும் துரோகியாக இருக்க முடியாது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை அளிக்கிறது என கூறி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...