தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. எனினும், ஈரானும் அந்த பகுதியில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பகுதியை எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் அதற்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் தெரிவித்தது.
ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலனை செய்து வருகிறது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த மார்ச் இறுதியில் கூறினார். இது உலக நாடுகளை கலக்கமடைய செய்தது. ஏனெனில் இந்த பகுதியில் வரியே 5-ல் ஒரு பங்கு சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று கொண்டு வரப்படும். இந்த பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் நாடுகள், எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்களுக்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என கூறினார். இதேபோன்று, ஈரானுக்கு தடை விதித்த நாடுகளுக்கு கடல்சார் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானிய நாடாளுமன்ற தேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி இன்று கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியின் வழியே குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் பயணிக்கும் வகையிலான இயக்க நடைமுறைகளை, அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளனர். அவை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
ஈரானால் நிர்வகிக்கப்படும் இந்த வழியில், எங்களுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் வர்த்தக கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த போக்குவரத்து மேலாண்மை நடைமுறைக்கு ஈடாக, ஈரான் கட்டணம் வசூலிக்கும் என கூறினார்.
இதனால், இந்த பகுதியிலுள்ள நீர்வழியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முடிவை ஈரான் உறுதி செய்வதுடன், அதன் மூலம் வருவாயையும் உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளது.