காத்மாண்டு,
வங்ககடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்காளதேசம், பூடான் மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பாக பிரதமர் மோடி பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இன்றைய உலகில் ஒன்றுபடாமல் எந்த ஒரு நாடும் தனித்து முன்னேறிவிட முடியாது என்று பேசினர்.
தொடர்ந்து இலங்கை அதிபர் சிறிசேனா, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், இன்று தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒச்சா-வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.
இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இன்று காலை பிம்ஸ்டெக் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசிக்கொண்டனர்.