உலக செய்திகள்

நாஜி படைகளால் கொல்லப்பட்ட யூதர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

ஜெருசலேமில் உள்ள யாத் வஷேம் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.

ஜெருசலேம்,

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின்னர் நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.

இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று ஜெருசலேமில் உள்ள யாத் வஷேம் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார். யாத் வஷேம் என்பது 2-ம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட யூதர்களுக்காக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் ஆகும்.

1941-ல் இருந்து 1945 வரை யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஹாலோகாஸ்ட்(Holocaust) என்ப்படும் இன அழிப்பு நடவடிக்கையின்போது, வதை முகாம்களிலும், கேஸ் சேம்பர்களிலும் அடைக்கப்பட்டு சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

2-ம் உலகப்போர் முடிந்து யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாக்கப்பட்ட பிறகு, நாஜி படைகளால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக யாத் வஷேம் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடம் இஸ்ரேல் மக்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான இடமாக திகழ்கிறது. இந்த நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.