லிஸ்பன்,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கல்லில் நாடாளுமன்றத்தை கலைத்தும், ஜனவரி மாதம் 30-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தும் அதிபர் மார்செலோ ரெபோலோ டி சூசா அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், பட்ஜெட்டை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இதனால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி அதிபர் மார்செலோ நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றியபோது, பொருளாதாரம் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு வெளியேற முயற்சிப்பதால் பட்ஜெட் முக்கியமானது. அது நிறைவேறாததால் தேர்தல் அவசியமாகிறது என தெரிவித்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தை கலைப்பதை அதிபர் தவிர்த்து இருக்க முடியும் என்று லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ்கோ பெரைரோ கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு பதிலாக வேறொரு அரசை அமையுமாறு செய்திருக்க முடியும். தொழில்நுட்ப வல்லுனர் தலைமையில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.