* உக்ரைன் விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பதவி நீக்க விசாரணையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனை கண்டித்துள்ள நாடாளுமன்ற விசாரணைக்குழு டிரம்ப் விசாரணை குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்திவிட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராகி தனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
* அல்பேனியாவின் தலைநகர் திரானாவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 650-க்கும் மேற்பட்டார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* மெக்சிகோவில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வரும் போதைப்பொருள் கும்பல்களை பயங்கரவாத குழுக்களாக அமெரிக்கா சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
* அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த 2 பேரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.