உலக செய்திகள்

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் - 39 பேர் பலி

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயலால் 39 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் உலகின் மிகவும் பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சக்தி வாய்ந்த புயல்கள் பிலிப்பைன்சை தாக்குகின்றன. இதுதவிர நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களும் அந்த நாட்டை உலுக்குகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் பிலிப்பைன்சில் இயற்கையின் ருத்ர தாண்டவமும் தொடருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்சை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த புயல்கள் தாக்குகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் கோனி என்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இது இந்த ஆண்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக அமைந்தது.

இந்த புயலால் பிலிப்பைன்சில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகி உள்ளனர். இந்த நிலையில் கோனி புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் பிலிப்பைன்சை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு பிலிப்பைன்சை தாக்கிய 21-வது புயலாகும்.

வாம்கோ என பெயரிடப்பட்ட இந்த சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவை புரட்டிப்போட்டுள்ளது.

மேலும் மணிலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலாக்கன் மற்றும் பம்பங்கா ஆகிய மாகாணங்களிலும் இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தொடங்கி 235 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.

புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதன் காரணமாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே புயல் காரணமாக மின்வினியோகம் தடைபட்டு, சுமார் 30 லட்சம் குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன.

இந்த நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 39 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 32 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்