உலக செய்திகள்

முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் - டிரம்ப் நடவடிக்கை; மத்திய அரசு அதிருப்தி

முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கி உள்ளது. இதனால் ரூ.39 ஆயிரம் கோடி வரியற்ற ஏற்றுமதி சலுகை பறிக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது என இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது; இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இப்படி தங்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற சாதனங்களுக்கும், பொருட்களுக்கும் இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வந்தது. இது நீண்டகால நடைமுறை.

இந்த திட்டத்தின்கீழ், அமெரிக்க நாடாளுமன்றம் வகுத்துள்ள தகுதி வரம்புக்கு உட்படுகிற நாடுகள், அமெரிக்க சந்தைக்கு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி வகைகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகளவில் பொருட் களை வரி விதிப்பின்றி அமெரிக்கா இறக்குமதி செய்தது. அதில் இந்தியா 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39 ஆயிரத்து 900 கோடி) அளவுக்கு பொருட் களை ஏற்றுமதி செய்து பலன் அடைந்தது. இந்த ஆண்டில் ஜி.எஸ்.பி. திட்டத்தில் அதிகளவு பலன் பெற்றது இந்தியாதான் என தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. திட்டத்தின்படி அமெரிக்காவுக்கு இந்தியா 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,200 கோடி) மதிப்பிலான பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்தது.

ஆனால் பல துறைகளில் இந்திய சந்தைகளில் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்குவோம் என மத்திய அரசு வாக்குறுதி வழங்க தவறி விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது.

இதனால் ஜி.எஸ்.பி. திட்ட தகுதி வரம்பு குறித்து அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மறு ஆய்வு செய்யத்தொடங்கியது. அதில், இந்தியாவை முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி, சலுகைகளை பறிக்க அமெரிக்கா திட்டமிட்டது.

இதுதொடர்பாக மார்ச் மாதம் 4-ந் தேதி 2 மாத நோட்டீஸ் கொடுத்தது. அந்த நோட்டீஸ் காலம் மே மாதம் 3-ந் தேதி முடிந்து விட்டது. இதையடுத்து, ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழான முன்னுரிமை நாடு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி நேற்று முன்தினம் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் அவர், இந்தியா தனது சந்தைகளில் (அமெரிக்க பொருட்களுக்கு) சமமான, நியாயமான வாய்ப்பு வழங்குவோம் என உறுதி அளிக்கவில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். எனவே, இந்தியாவை பலன்பெறும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, ஜூன் 5-ந் தேதியில் இருந்து நீக்குவது பொருத்தமானதாகும் என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இந்த முடிவை எடுக்கக்கூடாது என்று அமெரிக்க எம்.பி.க்கள், பலரும் டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்பதையே டிரம்ப் உத்தரவு காட்டுகிறது.

இந்த உத்தரவினால் இந்தியா ஆண்டுக்கு 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,200 கோடி) பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்யும் சலுகையை இழக்க வேண்டியது வரும்.

மத்தியில் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு விழுந்துள்ள அடியாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதையொட்டி மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், எந்த ஒரு உறவிலும் குறிப்பாக பொருளாதார உறவில், ஒவ்வொரு காலகட்டத்திலும் பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் உண்டு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், வளருகிற நாடுகளுக்கு ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழான பலன்களை பறிப்பது ஒரு தலைப்பட்சமானது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முற்போக்கான வழி தேட வேண்டும் என அமெரிக்கா முன்வைத்த குறிப்பிடத்தக்க வேண்டுகோள்களுக்கு, இந்தியா தீர்வுகளை கூறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை