உலக செய்திகள்

இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு, ஜெட் விமானங்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு

இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

ஜகார்த்தா,

இந்தோனேசியா அரசு சார்பில் போர் விமானங்கள் புடைசூழ பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 3 நாடுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறை பயணத்தைப் பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக, அவர் இன்று இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, பிரதமர் மோடியை கை குலுக்கி வரவேற்றார்.

கை தட்டி பாராட்டினர்

இதை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை, அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், பிரதமரை வரவேற்கும் விதமாக அரங்கேறிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி வியப்புடன் ரசித்து, கைதட்டி பாராட்டினார்.

அதன்பின்னர் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

நன்மை

ஜகார்த்தாவை வந்தடைந்தேன். விமான நிலையத்திலேயே என்னை நேரில் வரவேற்ற அதிபர் பிரபோவோ சுபியான்டோவின் அன்பான உபசரிப்பு என் மனதை நெகிழ செய்தது. 2018-ஆம் ஆண்டில், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான உத்திசார் கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தினோம்; இது நமது மக்களுக்கு பல நன்மைகளை அளித்துள்ளது.

இந்தப் பயணத்தின்போது, ​​பல்வேறு துறைகளில் இந்த கூட்டாண்மைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலான ஆலோசனைகளை அதிபர் பிரபோவோ சுபியான்டோவும் நானும் மேற்கொள்வோம்.

பிரம்பானன் கோயில்

அதிபர் பிரபோவோவும் நானும் யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பானன் கோயில் வளாகத்தையும் பார்வையிடுவோம். இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்தோனேசியாவில் இருக்கும்போது, ​​அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளர்.

யோக்யகர்த்தா நகரத்திற்கு வடகிழக்கே, சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோயில், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக அதிபர் பிரபோவோ இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது."

ஆஸ்திரேலிய பயணம்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவில் இருந்து பிரதமர் மோடி மெல்போர்ன் நகரத்திற்கு செல்லவிருக்கிறார். அங்கு இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி, போக்குவரத்து மற்றும் மக்கள் இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான பிரம்மாண்ட வாய்ப்பை இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து பயணம்

இறுதியாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சானின் அழைப்பின் பேரில், மெல்போர்னில் இருந்து ஆக்லாந்து நகரத்திற்கு பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிக ரீதியிலான ஈடுபாடுகளை எவ்வாறு மேலும் விரிவுபடுத்துவது என்பது குறித்து நியூசிலாந்து பிரதமருடன் மோடி விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.