லாஸ் பனோஸ் ( பிலிப்பைன்ஸ்),
ஆசியன் மாநாட்டில் கலந்து கொள்ள 3 நாட்கள் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் உள்ள உலகளாவிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார். உலகின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான அங்கு சென்ற மோடியிடம் விஞ்ஞானிகள், அரிசியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உணவு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பனோஸ் பகுதியில் மேற்கண்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) செயல்பட்டு வருகிறது. தலைநகர் மணிலாவில் இருந்து 65 கி.மீட்டர் தொலைவில் இந்த லாஸ் பனோஸ் நகரம் உள்ளது. இந்த மையத்தில் அதிக அளவில் இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடியிடம் வெள்ளம் தாங்கும் நெற்பயிர்கள் பற்றி விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர். 14 முதல் 18 நாட்கள் நீரில் மூழ்கி இருந்தாலும், இந்த வகை நெற்பயிர்கள் மூலம், ஹெக்டேருக்கு 1 முதல் 3 டன்கள் அரிசியை விளைவிக்க முடியும் என்ற தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மையத்தை வாரணாசியிலும் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் அமையும் இந்த மையத்தில், அதிக விளைச்சல் தரும் அரிசி வகைகளை உருவாக்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 17 நாடுகளில் அலுவலகம் உள்ளது. 1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பசுமை புரட்சியின் பங்களிப்பாக இந்த மையம் செயலாற்றி வருகிறது.
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இது பற்றி கூறும்போது, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் விவசாயத்திற்கான இந்திய கவுன்சிலுடன், வறட்சி, வெள்ளம் மற்றும் உப்பு தன்மை ஆகியவற்றை தகவமைத்துக் கொள்ளும் அரிசி வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த வெற்றிகரமாக ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.