கொலம்பியா,
கொலம்பியா குடியரசின் அதிபராக இவான் டியூக், கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். கொரோனா தொற்று உலகெங்கும் பரவி வரும் இந்த சூழலில், கொலம்பியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொலம்பியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாகவும், வேலைவாய்ப்பின்மை 16.8 சதவீதமாகவும் இருந்தது.
இந்த அளவு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம், கொலம்பியா அதிபர் இவான் டியூக்கின் மோசமான திட்டமிடல் மற்றும் பொருளாதார கொள்கைகள் தான் என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பொருளாதார பாதிப்பிற்கு பொறுப்பேற்று, அதிபர் இவான் டியூக் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன்படி அதிபர் இவான் டியூக் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொலம்பியாவில் 2-வது வாரமாக தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஒரே வாரத்தில் போராட்டங்களில் 31 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,220 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 87 பேர் காணாமல் போய்விட்டதாகவும் கொலம்பியா வளர்ச்சி மற்றும் அமைதி ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.