ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். அவரது மகள், மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காமேனி கொல்லப்பட்டதற்கான விலையை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொடுத்தே தீர வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அதேவேளையில், ஈரான் பதிலடி கொடுத்தால் கடும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் நேச நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது. சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் வளைகுடா நாடுகளில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானிலும் டிரம்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சிலர் அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகத்திற்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.