இஸ்லாமாபாத்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருகிறது என இந்திய தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் (பொறுப்பு) அந்நாட்டில் தீவிரவாத முகாம்கள் மற்றும் அதன் தலைமை இருப்பது பற்றிய தகவல்களை இந்தியா பகிர்ந்து கொண்டது.
இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாங்கள் 54 தனிநபர்களை பிடித்து விசாரணை நடத்தினோம். அவர்களுக்கு புல்வாமா தாக்குதலுடன் தொடர்பு இருப்பதனை கண்டறிவதற்கான எந்த விவரங்களும் இதுவரை இல்லை.
இதேபோன்று இந்தியா பகிர்ந்த தகவலின்படி 22 முக்கிய இடங்களில் நடத்திய ஆய்வில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை. இந்த இடங்களுக்கு சென்று பார்வையிட இந்தியா கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதில் உறுதியுடன் இருக்கிறோம் என கூறிய பாகிஸ்தான், இந்த தாக்குதல் பற்றி நடத்திய முதற்கட்ட ஆய்வின் விவரங்களை இந்தியாவிடம் வழங்கியதுடன், சில கேள்விகளையும் முன்வைத்துள்ளது.