வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படுபவர் அலினா கபெவா. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். அதேவேளை, ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான ஆர்.டி (ரஷியா டுடே)-யின் இயக்குனராகவும் அலினா செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷிய அதிபர் புதின், ரஷிய ராணுவ தளபதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என பல தரப்பின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கபெவா பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும், அவரின் சொத்துக்களையும் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.