வாணவேடிக்கை நிகழ்ச்சிகள்
அமீரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் வண்ணமயமாக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று துபாய் புர்ஜ் கலீபா பகுதியில் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டிடம் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் நடைபெற்ற வாணவேடிக்கை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல் துபாய் பிரேம், அய்ன் துபாய், குளோபல் வில்லேஜ் மற்றும் எக்ஸ்போ 2020 பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். சார்ஜாவில் கடற்கரையொட்டிய பகுதிகளில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
உருவப்படங்கள் ஒளிர்ந்து பிரமிக்க வைத்தது
இதையடுத்து, அபுதாபியில் ஷேக் ஜாயித் திருவிழா வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை மற்றும் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட கண்கவர் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. இதற்காக அந்த வளாகத்தில் 2 ஆயிரத்து 22 டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பயன்படுத்தப்பட்டது.
வானில் பறந்து சென்ற அந்த டிரோன்கள் வரிசையாக அடுக்கப்பட்டு முன்னாள் அமீரக அதிபர் மறைந்த ஷேக் ஜாயித், தற்போதைய அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோரின் உருவப்படமாக ஒளிர்ந்து பிரமிக்க வைத்தது.
3 முந்தைய சாதனைகள் முறியடிப்பு
அதேபோல் ஹேப்பி நியூ இயர் 2022 என ஆங்கிலத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறப்பட்டது.
அபுதாபியின் அல் வாத்பா பகுதியில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி இடைவிடாமல் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு நடத்தப்பட்டது. இதற்காக அந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவு வாணவேடிக்கை, அதிக நேரம் மற்றும் வடிவம் ஆகியவற்றில் 3 முந்தைய சாதனைகளை முறியடித்து 3 புதிய கின்னஸ் சாதனை விருதுகள் அறிவிக்கப்பட்டது
ராசல் கைமாவுக்கு 2 கின்னஸ் விருதுகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி, ராசல் கைமாவின் அல் மர்ஜான் தீவு பகுதியில் இடைவிடாது 4.7 கி.மீ தொலைவுக்கு 12 நிமிட நேர வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் நீண்ட நேரம் வாண வேடிக்கை செய்யப்பட்டதற்கான கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 3 ஆயிரத்து 463 அடி (1,055.8 மீட்டர்) உயரத்திற்கு 452 டிரோன்கள் வானில் மிக உயரமாக பறக்க விடப்பட்டு ஆங்கிலத்தில் ஹேப்பி நியூ இயர் என எழுதப்பட்டது போன்ற காட்சி நடத்தப்பட்டது. இந்த உயரம் புர்ஜ் கலீபா கட்டிடத்தை விட 740 அடி கூடுதலாகும். மிக உயரமான இடத்தில் தொலை தூரத்தில் இருந்து இயக்கப்பட்ட டிரோன் காட்சிக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.