புதுடெல்லி,
யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனுவில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர், ராசிமணல் பகுதியில் அணையைக் கட்டுவதற்கு 1961-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது.
ராசிமணலில் அணை கட்டப்பட்டால் 90 முதல் 100 டிஎம்சி அளவுக்கு நீரை தேக்கிவைக்க முடியும். அதில் 10 டிஎம்சி நீரை பெங்களூருவுக்கு வழங்க முடியும். 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து 500 மெகாவாட் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு வழங்கினால், இரு மாநிலங்களும் பயன்பெற முடியும். எனவே தேசிய நலன் கருதி ராசிமணல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான குழு, ராசிமணல் அணை திட்டம் தொடர்பாக உரிய அரசுகளிடம் கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளதா? என கேட்டனர். இதற்கு மனுதாரர் யானை ராஜேந்திரன், ராசிமணல் அணை திட்டம் தொடர்பாக ஜனவரி மாதமே கோரிக்கை மனு அளித்து விட்டதாகவும், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கோரி யானை ராஜேந்திரன் அளித்த மனு தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை முடித்து வைத்தனர்.