கீவ்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுபற்றி, ரஷிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரியான இகோர் கொனாஷெங்கோவ் இன்று கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் உக்ரைனின் 10 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷிய போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உதவியுடன் வீழ்த்தி உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மொத்தம் 69 விமானங்கள் தரை பகுதியிலும், 24 விமானங்கள் வான்வெளியிலும், 778 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 77 ஏவுகணை தாக்குதல் நடத்தும் சாதனங்கள், 279 தரையில் இருந்து தாக்குதல் நடத்தும் சிறிய ரக பீரங்கிகள், 553 சிறப்பு ராணுவ வாகனங்கள் மற்றும் 62 ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து உள்ளோம் என கூறியுள்ளார்.
உக்ரைனின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷிய ஆயுத படைகள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னேறி உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், நேட்டோ நாடுகளின் உறுப்பினர்களில் ஒன்றான துருக்கி, ரஷியா மற்றும் உக்ரைனுடன் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இரு நாடுகளுடனும் துருக்கி சுமுக உறவை கடைபிடித்து வருகிறது. துருக்கி அதிபர் எர்டோகன், புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடம், மனிதநேய அடிப்படையில் ரஷியா உக்ரைனில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷிய செய்தி நிறுவனம் டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேசிய புதின், உக்ரைனில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கையை தற்காலிகம் ஆக நிறுத்த வேண்டுமெனில், கீவ் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். ரஷியாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேசியுள்ளார் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று ரஷியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தொலைபேசி உரையாடலில், தொன்பாசை பாதுகாப்பதற்கான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் பற்றி புதின் தெரிவித்து உள்ளார். இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்குகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவை பற்றியும் அவர் எர்டோகனிடம் குறிப்பிட்டு கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.