உலக செய்திகள்

தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா

தங்களின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அறிவித்துள்ளது.

தினத்தந்தி

இருகொரிய நாடுகள் இடையே மோதல்

1950-களில் நடந்த கொரியப் போரின் போது வடகொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. இருநாடுகளுக்கு இடையிலான இந்த போர் 1953-ம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும் போர் நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருகொரிய நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதே இதற்கு காரணம்.இந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் இருநாடுகளின் எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர். அதன் பிறகு இருநாடுகள் இடையிலான பகைமை தணிந்து இணக்கமான சூழல் உருவானது.அதனை தொடர்ந்து, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையை இருநாடுகளும் தொடங்கின. ஆனால் இருநாடுகளுக்கு இடையிலான இந்த இணக்கமான உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும் இருகொரிய நாடுகள் இடையிலான உறவு மீண்டும் சிக்கலானது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

இந்த சூழலில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பி சென்ற வடகொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வடகொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வடகொரியாவுக்கு அனுப்பி வந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரிய எல்லையில் கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தது. மேலும் தென்கொரியாவுடனான உறவை முழுவதுமாக முறித்து கொள்வதாகவும் வடகொரியா அறிவித்தது. இதனால் இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் மோதல் போக்கு உருவானது.இதற்கிடையில் அண்மையில் வடகொரியா அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை சோதித்து தென்கொரியாவை அதிரவைத்தது. அதை தொடர்ந்து, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில் தென்கொரியாவும் தனது முதல் நீர்மூழ்கி ஏவுகணையை சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்

இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் கொரியப் போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த நிலையில் தென்கொரியாவின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள வடகொரியா, விரோத கொள்கையை கைவிட்டால் தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு பிறகு அந்த நாட்டின் அதிகாரமிக்க தலைவராக அறியப்படும் அரவது சகோதரி கிம் யோ ஜாங் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை கையாளும் அணுகுமுறைகள், நியாயமற்ற பாரபட்சம் மற்றும் சுய பாதுகாப்புக்கான நமது நியாயமான செயல்பாட்டை குறைக்கும் அதே வேளையில் தங்கள் சொந்த செயல்களை நியாயப்படுத்தும் விரோத நிலைப்பாடு ஆகியவை கைவிடப்பட வேண்டியவை. அத்தகைய முன்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே, நேருக்கு நேர் அமர்ந்து போரின் குறிப்பிடத்தக்க முடிவை அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்