டெஹ்ரான்,
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளாத்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தா. மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினா. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. எனவே அமெரிக்கா மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவதற்கு ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.இந்தநிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் ஒரு தூதரக வழி பற்றி விவாதிக்க ஈரான் மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளுடன் அமர்ந்து பேச அமெரிக்கா தயாராக உள்ளது. ஈரானுடனான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் பன்முக தூதரக பங்கை மீண்டும் தொடங்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி பூண்டுள்ளார் எனக் கூறினார்.