ஓஸ்லோ,
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர், பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் நார்வே நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நார்வேயில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு விதிகளை கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2வது அலை பரவுதை தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்கு கல்லூரிகள், உணவகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.