மெக்சிகோ சிட்டி,
அர்ஜென்டினா நாட்டில் கடந்த மாதம் 27-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மொரிசியோ மேக்ரியும், ஜஸ்டியலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆல்பர்டோ பெர்னாண்டசும் மோதினர்.
இந்த தேர்தலில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். அர்ஜென்டினாவில் பதவியில் உள்ள அதிபர் ஒருவர் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல் முறை.
புதிய அதிபராக ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அடுத்த மாதம் 10-ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் பதவிக்காலம் முடிய உள்ள தற்போதைய அதிபர் மொரிசியோ மேக்ரி, 17 வெளிநாடுகளில் தூதர்களாக அரசியல் சார்புள்ளவர்களை நியமித்திருந்தார். அவர்கள் தூதரக ரீதியில் தகுதி பெறாதவர்கள்.
புதிய அதிபர் பதவி ஏற்க உள்ள நிலையில், இந்த 17 தூதர்களையும் நாடு திரும்பி விடுமாறு தற்போதைய அதிபர் மொரிசியோ மேக்ரி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பொலிவியா, கொலம்பியா, சிலி, ஈக்குவடார், மெக்சிகோ, பெரு, பராகுவே, உருகுவே, கோஸ்டாரிகா, ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய தூதர்கள் நியமிக்கப்படுவார்கள்.