பாக்தாத்,
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன. அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் வரை அங்கு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈராக்கில் உள்ள ராணுவ மற்றும் விமான படைத் தளங்களில் முகாமிட்டுள்ளனர்.
இந்த சூழலில் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
அதுமட்டும் இன்றி ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற ஈராக் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலத்தின் மீதும், அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 6 ராக்கெட் குண்டுகளை வீசினர். எனினும் ஈரான் வான் பாதுகாப்பு படை அந்த ராக்கெட்டுகள் விமான நிலையத்தை நெருங்குவதற்கு முன் அவற்றை நடுவானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தின. இதனால் மிகப்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருந்த போதிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்தன. இதில் ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.