உலக செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி: இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு - லண்டன் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை

ரூ.9 ஆயிரம் கோடிக்கு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தினத்தந்தி

லண்டன்,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். ஆனால் அதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜய் மல்லையா (வயது 62) 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் லண்டன் நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது.

சி.பி.ஐ.யும் பணமோசடி தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து அவரை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனர். எனினும் அவர் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்னோட் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

அப்போது விஜய் மல்லையா தரப்பில், நான் பண மோசடி செய்யவில்லை. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் வர்த்தகம் சரிவர நடைபெறாத காரணத்தால்தான் நிதி இழப்பு ஏற்பட்டது. வங்கியில் வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்த தயாராக இருக்கிறேன் என்று வாதிடப்பட்டது.

சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி எம்மா ஆர்புத்னோட் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அப்போது, வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று அவர் உத்தரவிட்டார்.

கோர்ட்டின் இந்த உத்தரவு இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இந்த தீர்ப்பின் மூலம் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று கோர்ட்டுக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் கூறுகையில், நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை. பணத்தை திருப்பி அளிப்பதாக கர்நாடக ஐகோர்ட்டில் உறுதி அளித்தேன். யாரும் கோர்ட்டுக்கு அளித்த வாக்குறுதியை மீற மாட்டார்கள். தவிர போலியாக உறுதி கூறவும் முடியாது. ஏனென்றால் அமலாக்கத்துறை எனது போலி சொத்துகளையா முடக்கியது? எனவே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதாக நான் அளித்த வாக்குறுதி போலியானது அல்ல என்றார்.

லண்டன் கோர்ட்டு தீர்ப்பை நிதி மந்திரி அருண்ஜெட்லி வரவேற்று உள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், இந்த நாள் இந்தியாவுக்கு சிறப்பான நாள். யாரும் இந்தியாவை ஏமாற்றிவிட்டு எளிதாக தப்பி விட முடியாது. இங்கிலாந்து கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பலன் அடைந்த ஒரு குற்றவாளியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்டத்தின் முன்பாக கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் சி.பி.ஐ.யும் லண்டன் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று உள்ளது.

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார். அவர் அடைக்கப்படும் சிறையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று ஏற்கனவே மத்திய அரசு தரப்பில் லண்டன் கோர்ட்டில் உறுதி அளித்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் இப்போதே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜய் மல்லையாவை சிறையில் பாதுகாப்பாக அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அவர் இங்கே கொண்டு வரப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவோம். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேரும் பட்சத்தில் அதற்காக மருத்துவ குழுவினரும் தயார் நிலை வைக்கப்படுவார்கள் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்