மாஸ்கோ,
சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. இந்த போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் மீது ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு ரஷியா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவற்றை நீக்கவில்லை.
எனவே இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஒன்றில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கூகுள் நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபிள் (சுமார் ரூ.26 லட்சம்) அபராதம் விதித்து உள்ளது.
முன்னதாக இதைப்போன்ற குற்றச்சாட்டில் ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா நிறுவனங்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.