மாஸ்கோ,
உக்ரைனில் நாளுக்கு நாள் ரஷிய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துள்ளது என ரஷிய அதிபர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
கிரெம்பிளின் என்று அழைக்கப்படும் ரஷிய அதிபர் மாளிகை போர் நிறுத்தம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஷிய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:-
உக்ரைன் மீதான இரண்டாம் நாள் போருக்கு பிறகு சற்றே போர் தணிந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. ரஷிய அதிபர் புதின் போரை நிறுத்த சொன்னார். உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர மறுத்ததன் காரணமாக மீண்டும் போரை தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்தால் மட்டுமே, இருதரப்பு விளக்கமும் புரிந்த பின் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதற்கிடையே, உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.