மரியுபோலில் தெருச்சண்டை
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நேற்று 24-வது நாளையெட்டியது.
ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் நகரில் டாங்குகள், பீரங்கி குண்டுகள் என அனைத்து வகையான ஆயுதங்களையும் நேற்று தெருக்களில் குவித்து தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ஏற்கனவே அவற்றின் தாக்குதலுக்கு உள்ளான தியேட்டர் இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் தாக்குதல்களால் இந்த நகர மக்கள் 3 லட்சம் பேர் வெளியேற முடியாமல் சிக்கித்தவிக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர், கேஸ் என அத்தியாவசிய சேவைகள் எதுவும் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.
உருக்காலை மீது தாக்குதல்
இங்குள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உருக்காலைகளில் ஒன்றான அசோவ்ஸ்டல் உருக்காலை மீது ரஷிய படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன. இந்த ஆலை அழிக்கப்படுவதாக உக்ரைன் உள்துறை மந்திரியின் ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ தெரிவித்தார்.
ஜபோரிஜியா நகரில், ரஷிய படைகள் மீண்டும் தாக்குதல் தொடுக்கலாம் என்று கருதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
அதிநவீன ஏவுகணைகள்
மேற்கு உக்ரைனில் உள்ள பாதாள ஆயுதக்கிடங்குகளை தாக்கி அழிக்கும்பணியில் ஒலியை விட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பணிக்கிற அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முதலாக பயன்படுத்தியதாக ரஷியா அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறும்போது, ஹைப்பர்சோனிக் ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் கூடிய கின்ஸால் ஏவுகணை அமைப்பு, இவானோ பிராங்கிவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெரிய பாதாள ஏவுகணை, வெடிமருந்து கிடங்குகளை அழிக்க பயன்படுத்தப்பட்டது. ஒடெசா பிராந்தியத்தில் வானொலி உளவு மையங்களை ரஷிய ஆயுதப்படைகள் அழித்தன என கூறினார்.
புறநகரங்கள் மீது தாக்குதல்
தலைநகர் கீவின் புறநகர்களான புச்சா, ஹோஸ்டோமெல், இர்பின், மோஷ்கன் ஆகியவற்றை ரஷிய படைகள் நேற்று குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.
தலைநகரில் இருந்து 165 கி.மீ. தொலைவில் உள்ள சுலாவுடிச் நகரம் முற்றிலும் தனிமைப்படுத்தபட்டள்ளது.
உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
இதற்கு மத்தியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது:-
ரஷியா வேண்டுமென்றே ஒரு மனிதாபிமான பேரழிவை உருவாக்குகிறது. உக்ரைனியர்கள் சரண் அடையக்கூடிய மோசமான நிலைமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் மிகப்பெரிய நகரங்களை ரஷிய படைகள் முற்றுகையிடுகின்றன. ஆனால் இதற்கான உச்ச விலையை ரஷியா கொடுக்கும். உக்ரைன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நீதியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இல்லையென்றால், ரஷியாவின் செலவுகள் மிக அதிகமாகும். பல தலைமுறைகளுக்கு உயர முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
69 ராணுவ நிலைகள் அழிப்பு
ஒரே இரவில் 69 ராணுவ நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 4 கட்டளைச்சாவடிகள், 4 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டன. ஒரு ரேடார் நிலையமும் தகர்க்கப்பட்டது. 12 ஏவுகணை கிடங்குகள் அழிக்கப்பட்டன. 12 ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.