கீவ்,
உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செர்னோபில் மின் நிலையத்தைச் சுற்றி, ரஷியா "பொறுப்பற்ற" செயல்களில் ஈடுபட்டதாக உக்ரேனிய மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.
இதன்காரணமாக, உக்ரைனில் மட்டுமல்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது என்று உக்ரைன் துணை பிரதமர் எச்சரித்தார்.
இதுகுறித்து உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தனது சமூகவலைதளமான டெலிகிராம் பதிவு வழியாக கூறியிருப்பதாவது,
ரஷியப் படைகள் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தை இராணுவமயமாக்குகின்றன.ரஷியப் படைகள் பழைய மற்றும் மோசமாகப் பராமரிக்கப்பட்ட ஆயுதங்களை பெரிய அளவில் அங்கு கொண்டு சென்றன.
இதன்மூலம், அணுமின்நிலையத்தின் சிதைந்த நான்காவது அணுஉலையைச் சுற்றி கட்டப்பட்ட கட்டுமானத்தை சேதப்படுத்தும் அபாயத்தை ரஷியப் படைகள் உருவாக்குகின்றன.
இந்த மண்டலத்தில் போரல் ஏற்பட்ட தீயை உக்ரைன் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை ரஷியப் படைகள் தடுத்தன.
ரஷிய படைவீரர்களின் பொறுப்பற்ற மற்றும் தொழில்சார்ந்த நடவடிக்கைகள் உக்ரைனுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே செர்னோபில் நிலையத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும் இனிமேலும் ரஷியாவால் அணுமின் நிலையத்துக்கு வரும் ஆபத்தை தடுக்க ஒரு திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
அணுஉலையை சேதப்படுத்துவதால் உக்ரைனில் மட்டுமல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், வளிமண்டலத்தில் கணிசமான அளவு கதிரியக்க தூசியை வெளியிட வழிவகுக்கும்.
ஆனால், ரஷியா இதன் பெரும் ஆபத்தை உணராமல், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆயுதங்களைக் கொண்டு செல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மறுமுனையில், உக்ரைனுக்குள் இருக்கும் தங்கள் நாட்டு படைகள், அங்குள்ள அணுசக்தி நிலையங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பதை ரஷியா மறுத்துள்ளது.
1986 இல் செர்னோபிலின் நான்காவது அணுஉலையில் ஏற்பட்ட விபத்தால், அணுக்கதிர்வீச்சு பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் வரை பரவி பேரழிவை உண்டாக்கியது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அந்த விபத்தின் பின்விளைவுகள் மற்றும் அதனால் வெளியான கதிர்வீச்சினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
அதனை தொடர்ந்து, செர்னோபிலில் அனைத்து அணுஉலைகளும் தற்போது சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அதை போன்ற ஒரு பேரழிவில் ஐரோப்பிய நாடுகளை சிக்க வைக்க ரஷியா இறங்கியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது.
உக்ரைனில் கடந்த மாதம் தொடங்கிய ரஷிய படையெடுப்பின் ஆரம்பகட்ட நாட்களில், ரஷியப் படைகள் செர்னோபில் நிலையத்தை ஆக்கிரமித்ததோடு, அங்குள்ள வேலைளைப் பராமரிக்கும் ஊழியர்களை வெளியே செல்வதையோ அல்லது பிற தொழிலாளர்கள் உள்ளே வருவதையோ சில நாட்கள் தடுத்தது குறிப்பிடத்தக்கது. .
1986ம் ஆண்டு செர்னோபில் அணுஉலை விபத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட நகரம் ஸ்லாவுட்டிச் ஆகும். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ஸ்லாவுட்டிச் நகர மேயர் கூறுகையில்,ரஷியப் படைகள் இந்த நகரத்தைக் கைப்பற்றின. அந்த மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றார்.
இதற்கிடையே, செர்னோபில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், அணுமின் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பணியாளர்கள் செயல்பட ரஷிய படைகள் அனுமதிக்கின்றதா என்பது குறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனம் கவலை தெரிவித்தது.