உலக செய்திகள்

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி அடுத்த மாதம் இந்தியா வருகை

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை லாவ்ரோவ் சந்திக்க உள்ளார்.

மாஸ்கோ,

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் அடுத்த மாதம் 14-ந்தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின்போது, ​​வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை லாவ்ரோவ் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகள் கூட்டம், தற்போதைய சர்வதேச பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆழமான விவாதங்களுக்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.