டமாஸ்கஸ்,
சிரியாவில் ரஷியாவின் போர் விமானம் அல்-கொய்தாவில் இருந்து பிரிந்து சென்ற குழுவால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானி உயிரிழந்தார் என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிரியாவின் கிளர்ச்சி கூறு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் மாகாணத்தில் பயங்கரவாதிகளால் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு ரஷியாவின் சுகோய் 25 ரக போர் விமானம் வீழ்த்தப்பட்டு உள்ளது.
அல்-கொய்தாவில் இருந்து பிரிந்து சென்ற பயங்கரவாத குழுக்கள் பிடியில் இருக்கும் பகுதியில் ராணுவ விமானம் விழுந்து உள்ளது, விமானத்தில் இருந்து விமானி வெளியே குதித்துவிட்டார். அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுக்கு எதிராக களமிறங்கிய ரஷிய படைகள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியில் ரஷியா வான்படை உதவியுடன் சிரிய அரசு தாக்குதலை நடத்தியது.
சிரியாவில் ரஷியாவின் சுகோய் 25 போர் விமானங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இட்லிப் மாகாணத்தின் மாஸ்ரான் பகுதியில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் அங்கு 10-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பாதுகாப்பு படை மேற்கொண்டு உள்ளது என கண்காணிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த விமானியின் உடலை மீட்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷியா 2015 செப்டம்பரில் களமிறங்கிய பின்னர் விமானத்தை பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்துவது என்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2016-ம் ஆண்டு ரஷிய பாதுகாப்பு படையின் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சிரியாவில் போரில் 45 ரஷிய படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகிறது.