Image Courtesy: AFP 
உலக செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை - ரஷியா

கிழக்கு உக்ரைனில் ரஷிய ராணுவம் தாக்குதலை தொடங்கிவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

ஏப்ரல் 19, 11.44 PM

ரஷியா தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனில் நட்பு நாடுகளுடன் ஜோ பைடன் காணொலி வாயிலாக ஆலோசனை

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதன் நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அழைப்பின் நோக்கம் "உக்ரைனுக்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவைப் பற்றி விவாதிப்பது மற்றும் எங்கள் நெருக்கமான ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக ரஷியாவை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகள்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஏப்ரல் 19, 10.31 PM

நேட்டோ தனது எல்லைகளை வலுப்படுத்துவதால் ரஷியா தயாராக வேண்டும் - ரஷிய ஊடகம் தகவல்

இதுதொடர்பாக ஒரு மூத்த ரஷ்ய அதிகாரி, நேட்டோ ரஷியாவுடனான அதன் எல்லைகளை வலுப்படுத்துவது இனி ஒரு பேச்சு அல்ல என்றும், சாத்தியமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மாஸ்கோ தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 9.00 PM

உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை - ரஷியா

உக்ரைனில் "ஆட்சி மாற்றத்தை" நாங்கள் விரும்பவில்லை எனவும் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். உக்ரைன் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்... மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம்" என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

லாவ்ரோவ் உக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிராகரித்தார், ரஷிய நாட்டில் அதன் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" தான் என்று கூறினார்.

ஏப்ரல் 8.00 PM

கிரெமினாவைக் கைப்பற்றிய ரஷிய படைகள்

உக்ரைனின் லுஹான்ஸ்கில் உள்ள கிரெமின்னாவிலிருந்து உக்ரைனை படைகளை வெளியேற்றுகிறது ரஷியா. இது ஒரு புதிய ரஷ்யபடையினரின் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 7.00 PM

ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால் அந்நாட்டின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா, சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதலும் அந்நாட்டில் குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 6.00 PM

ரஷிய தாக்குதலில் 205 அப்பாவி குழந்தைகள் பலி - உக்ரைன் அரசு

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 205 அப்பாவி குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும் 367 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ரஷியப் படைகள் 1,141 கல்விக் கட்டிடங்களையும் சேதப்படுத்தியுள்ளன என்றும் அவற்றில் 99 முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5.00 PM

உயிர்பிழைக்க வேண்டுமெனில் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையவும் - உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா இறுதி எச்சரிக்கை

ஏப்ரல் 4.00 PM

கார்கிவ் நகரை சூறையாடும் ரஷியா... தீக்கிரையாகும் கட்டிடங்கள் - மக்கள் அலறல்

உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஏவுகணை தாக்குதலால் கட்டடங்கள், வாகனங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்த நிலையில், இதில் 2 பேர் உயிரிழந்தனர். கார்கிவ், சபோரிஜியா, டொனெட்ஸ்க், டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க், மற்றும் மைகோலாயிவ் துறைமுகம் ஆகிய பகுதிகளில் 16 உக்ரைனிய ராணுவ தளவாடங்களை அழித்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், பொதுமக்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டிற்கும் ரஷியா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 3.00 PM

உக்ரைனின் லிவீவ் நகரில் வெளிநாட்டு ஆயுதங்களை அழித்ததாக ரஷியா தகவல்

லிவிவ் நகருக்கு அருகிலுள்ள உக்ரைனிய ராணுவ தளவாடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தி, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெளிநாட்டு ஆயுதங்களை ரஷிய வான்படைகள் அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டினிப்ரோ நகரில் உள்ள "டோச்கா யு பாலிஸ்டிக் ஏவுகணை பழுதுபார்க்கும் மையத்தையும்" ரஷியப் படைகள் அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2.00 PM

மரியுபோல் மீது ரஷியா பயங்கர தாக்குதல்..! குடிநீர் கூட இன்றி தவிக்கும் மக்கள்

ரஷிய படைகள் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் குடிநீர் கூட இன்றி தவித்து வருகின்றனர். மரியுபோலின் பிரிமோர்ஸ்கி மாவட்டம் கடுமையான சேதத்தினை சந்தித்துள்ளது. ரஷியா மரியுபோலை கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றியதாக தெரிவித்திருந்த நிலையில், அதை உக்ரைன் மறுத்திருந்தது. இதையடுத்து நகரை முழுமையாக கைப்பற்ற தீவிர நடவடிக்கைகளை ரஷியா எடுத்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளுமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 12.01 pm

உக்ரைனின் கிழக்கு நகரான டான்பாஸ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷியா படைகள் முயற்சித்து வரும் நிலையில் அந்த நகரில் தொடர்ந்து குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 9.00 am

ஜோ பைடனுக்கு உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை: வெள்ளை மாளிகை தகவல்

ஏப்ரல் 7.30 am

ரஷிய அதிபருடனான உரையாடல் நிறுத்தப்பட்டது: பிரான்ஸ் அதிபர்

ஏப்ரல் 19, 05.59 a.m

ரஷிய படையெடுப்பால், உக்ரைனின்உள்கட்டமைப்பில் 30% வரை சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19, 05.19 a.m

மாஸ்கோ தனது நடத்தையை மாற்றினால் ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஏப்ரல் 19, 04.49 a.m

டான்பாசில் போர் தொடங்கிவிட்டது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19, 04.27 a.m

ஹோவிட்சர்கள் குறித்த உக்ரைனியர்களுக்கு வரும் நாட்களில் அமெரிக்கா பயிற்சி அளிக்கும்: அதிகாரி தகவல்

ஏப்ரல் 19, 03.05 a.m

டான்பாசில் கவனம் செலுத்துவதாக ரஷியா கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலின் தொடக்கத்தை அந்நாட்டு அதிபர் ஜெலெனஸ்கி அறிவித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19, 02.46 a.m

கிழக்கு உக்ரைனில் ரஷிய தாக்குதல் 'தொடங்கிவிட்டது': உள்ளூர் அதிகாரிகள் தகவல்

ஏப்ரல் 19, 02.06 a.m

கிழக்கு உக்ரைனில் ரஷிய தாக்குதல்களில் குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 19, 01.41 a.m

ரஷியப் படைகள் திங்களன்று டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் முனைகளில் கிட்டத்தட்ட அனைத்து பாதுகாப்புகளையும் உடைக்க முயன்றதாக உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 19, 12.32 a.m

உக்ரைன்: கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷியா ராணுவம் தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது

ஏப்ரல் 19, 12.11 a.m

உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ நிலைகள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை.

உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த போரில் ரஷியாவின் கனவு நிறைவேறவில்லை.

தலைநகர் கீவை கைப்பற்ற முடியாமல்போன நிலையில் துறைமுக நகரமான மரியுபோல் நகரை வீழ்த்த முழு மூச்சாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

ஆனால் மரியுபோல் நகரை பாதுகாத்து வரும் உக்ரைன் வீரர்கள் ரஷிய படைகளிடம் அடிபணிய மறுத்து, தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் மரியுபோல் நகரம் மீது ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைனின் அனைத்து நகரங்களையும் இலக்காக வைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடுகையில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லிவிவ் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன.

இதனால் மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட பேரழிவை சந்தித்து வரும் நகரங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கான புகலிடமாக மேற்கு நகரங்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் மேற்கு நகரமான லிவிவ் மீது நேற்று காலை ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கின. அந்த நகரில் உள்ள 3 ராணுவ நிலைகள் மற்றும் கார் டயர் பழுதுநீக்கும் தொழிற்சாலை மீது அடுத்தடுத்து பல ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 11 பேர் படுகாயமடைந்ததாகவும் லிவிவ் நகர மேயர் ஆன்ட்ரி சடோவி தெரிவித்தார்.

இதனிடையே உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ரஷிய படைகளின் பெரிய தரைவழி தாக்குதலை எதிர்க்கும் உக்ரைன் ராணுவத்தின் திறனை குறைக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஆயுத தொழிற்சாலைகள், ரெயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்புகளை இலக்காக வைத்து ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக ராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தலைநகர் கீவ் மீதும் ரஷிய படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கீவ் அருகே உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றைஇரவோடு, இரவாக நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே போல் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் மீதும் நேற்று காலை ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கீவில் ரஷிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்புகளை சரமாரியாக தாக்கின. இதில் அங்குள்ள வீதிகளில் உடைந்த கண்ணாடி மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடந்ததை காண முடிந்தது.

இதற்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான 136 போர் விமானங்கள், 471 ஆளில்லா விமானங்கள், 249 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், 2,308 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 254 ராக்கெட் அமைப்புகள், 998 பீரங்கி துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் ரஷியபடைகள் சித்ரவதைகள் மற்றும் கடத்தல்களை நடத்திவருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை கடத்துவதாகவும், அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதோடு, மனிதாபிமான உதவிகளை திருடுவதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

இது ரஷியாவின் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என சாடிய ஜெலன்ஸ்கி ரஷியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும், தங்களுக்கு இன்னும் அதிகமான ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து