பெர்லின்,
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவரான அலெக்சி நவால்னி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வந்திறங்கிய சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது. புதினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நிற்க முயன்று, தடை விதிக்கப்பட்டு, இன்னமும் அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் நவால்னி.
நவால்னி விமானத்தில் பயணிக்கும்போது திடீரென நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்கு சென்றார் அவரது ஆதரவாளர்கள், அவரது தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதன் பின்னணியில் ரஷிய அதிபரின் அலுவலகம் இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். அவரை ஜெர்மனிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பும்படி அந்த மருத்துவர்கள் கோர, அவரால் விமானத்தில் பயணிக்கமுடியாது என்று கூறி ரஷ்ய மருத்துவமனை அவரை ஜெர்மனிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து, நவால்னி விஷயத்தில் தலையிட்ட ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜெர்மன் மருத்துவமனை ஒன்றில் நவால்னி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஷ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டதாக ஜெர்மன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அலெக்சி நவால்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அலெக்சி நவால்னியின் மனைவியும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.