(Credits: AP) 
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: போர் முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் பதிலுக்கு காத்திருக்கிறோம் - ரஷியா

ரஷியாவின் போர் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து 'அதன் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

ஏப்ரல் 20, 11.58 p.m

தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைனின் கடைசி கோட்டையான பரந்த அசோவ்ஸ்டல் எஃகு ஆலைக்கு அடியில் சுமார் 1,000 பொதுமக்கள் தங்கியிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 20, 11.12 p.m

உக்ரேனிய பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் இடத்திற்கு வெளியேற்றப்பட்டவர்களை சரியான நேரத்தில் அனுப்ப ரஷியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் தவறிவிட்டதாக உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

ஏப்ரல் 20, 10.32 p.m

உக்ரைனின் துணைப் பிரதமர், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற ஒப்புக்கொண்ட மனிதாபிமான தாழ்வாரம் திட்டமிட்டபடி செயல்படவில்லை என்றும், ரஷியப் படைகள் தங்கள் போர்நிறுத்தத்தை செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஏப்ரல் 20, 8.00 PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவரை கீவ்விற்கு வரவேற்ற - உக்ரைன் அதிபர்

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலை கிவ்வுக்கு வரவேற்பதைக் காட்டும் காட்சிகளை உக்ரைன் அதிபர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள், உக்ரைனுக்கான பாதுகாப்பு மற்றும் நிதியுதவி மற்றும் மைக்கேலின் வருகையின் போது ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கான கெய்வின் முயற்சி குறித்து இருவரும் விவாதித்ததாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ஏப்ரல் 20, 7.00 PM

போர் முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் பதிலுக்கு காத்திருக்கிறோம் - ரஷியா

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் தான் காரணம். முன்னர் ஒப்பு கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருகிறது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்ரல் 20, 6.00 PM

உக்ரைன் வீரர்களுக்கு விடுத்த காலக்கெடு முடிந்தது - ரஷியா

மரியுபோலில் அருகே உள்ள எஃகு ஆலையில் வசிக்கும் உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ரஷியா அழைப்பு விடுத்தது இந்தநிலையில் உக்ரேனியப் படைகள் சரணடைய காலக்கெடு கடந்துவிட்டது என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த இடத்திற்கு அடியில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 20, 5.00 PM

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25% படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷியாவின் பலம் குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அனுப்பி வைப்போம் என கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷியா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடியா விட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 20, 4.00 PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கீவ் வந்தடைந்தார்

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் வந்தடைந்தார்.

இன்று கீவ்வில். சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பாவின் இதயத்தில், என்று மைக்கேல் தனது டுவிட்டர் பதிவில், ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 20, 3.00 PM

கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதல்.. சாலைகளில் சிதறிக் கிடந்த சடலங்கள்..! உக்ரைனின் பரிதாப நிலை..!

உக்ரைனின் கார்கிவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலியானதுடன், மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் சிதைந்து போன நிலையில், சாலைகளில் சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது காண்போரை கன்கலங்க வைத்துள்ளது.

ஏப்ரல் 20, 2.00 PM

மரியுபோல் நிலைமை மிகவும் மோசம்m - ஜெலன்ஸ்கி கவலை

உக்ரைனின் மரியுபோல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். மரியுபோலை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தீவிர நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி,

"மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளை" ரஷியா தடுப்பதாகவும், "ரஷியா முழுமையான தீமையின் ஆதாரம்" என்றும் குற்றம் சாட்டினார். ரஷியா இறுதி எச்சரிக்கை விடுத்தும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் சரணடைய மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 20, 11.00 am

அமெரிக்காவை தொடர்ந்து கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளன.

ஏப்ரல் 20, 06.00 a.m

உக்ரைனுக்கு மற்றொரு ராணுவ உதவித் தொகையை அறிவிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20, 05.16 a.m

மூன்று ஐரோப்பிய நாடுகளில் இருந்து 31 தூதர்களை வெளியேற்றுவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20, 04.25 a.m

கிழக்கு உக்ரைனை ரஷியா ஆக்ரமிப்பு செய்துள்ளதால், மேலும் பொருளாதாரத் தடைகளை 'இறுக்க' மேற்கு நாடுகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏப்ரல் 20, 03.15 a.m

போர் 55 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மாஸ்கோ கீவ்வுடன் புதிய மோதலைத் தொடங்குகிறது

ரஷியா-உக்ரைன் போரின் 55 நாட்கள் நிறைவடைந்த நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், கீவ்வுடன் ஒரு புதிய கட்ட மோதலை தொடங்கியுள்ளதாக மாஸ்கோ கூறியது. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நட்பு நாடுகளுடன் உக்ரைனில் உள்ள நிலைமை குறித்து விவாதிக்கவும், ரஷியாவை பொறுப்புக் கூறவும் அழைப்பு விடுத்தார்.

ஏப்ரல் 20, 03.12 a.m

ரஷியாவின் போர் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் - ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷிய சர்வாதிகாரி விளாடிமிர் புதின் தான் கொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சிக்கு கூடுதலாக, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கத்திற்கு ஒரு பெரிய காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.

"ரஷியாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் எரிவாயு விலைகள் மற்றும் உணவு விலைகளை உயர்த்தியுள்ளது" என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20, 03.05 a.m

மரியுபோல் சில நாட்களில் வீழ்ச்சியடையக்கூடும் என்று ஐரோப்பிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20, 02.45 a.m

கிரெம்ளினை விமர்சனம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, ரஷிய வீரர்கள் தனது பெயரைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரேனியரைக் கொன்றதாக தெரிவித்தார்.

ஏப்ரல் 20, 02.11 a.m

ரஷியாவின் வார்சா தூதரகம் செயல்பட முடியாவிட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20, 01.58 a.m

உக்ரைனின் ராணுவம் கீவ்வின் ஆயுதக் களஞ்சியத்தில் சேதமடைந்த அல்லது செயலிழந்த மற்றவற்றை சரிசெய்ய அதிக விமானங்கள் மற்றும் பாகங்களைப் பெற உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20, 01.21 a.m

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 20, 12.49 a.m

உக்ரைனில் நடந்த 'போர்க்குற்றங்களுக்கு' ரஷிய அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20, 12.06 a.m

கிழக்கு உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்: எதிர்தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி சூளுரை

கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளன. என்ன விலை கொடுத்தேனும் எதிர்தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரைத்தார்.

உக்ரைன் மீதான போரில் 50 லட்சம் உக்ரைனியர்கள் அகதிகளாகி உள்ளனர். தப்பி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் 90 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். 18 முதல் 60 வயதுடைய ஆண்கள், ராணுவ அழைப்புக்கு தகுதி உடையவர்கள் என்பதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது.

மூன்றில் இரு பங்கு குழந்தைகள் வலுக்கட்டாயமாக வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் கனவு, நிறைவேறாத நிலையில் ரஷியாவின் தற்போதைய கவனம், முழுக்க முழுக்க கிழக்கு உக்ரைன் பக்கமாய் திரும்பி உள்ளது. நாட்டின் கிழக்கு தொழில் மையப்பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கான முழு அளவிலான தரைவழி தாக்குதல் போரின் அடுத்த கட்டமாக மாறி உள்ளது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய ப டைகள் தங்கள் முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் அடங்கிய டான்பாஸ் பகுதிகளை குறிவைத்து, அண்டை நகரமான கார்கிவ் உள்ளிட்ட பல பிரிவுகளில் ரஷிய படைகள் முன்னேறும் முயற்சியில் உள்ளன.

கிழக்கு டான்பாசில் 480 கி.மீ. நீளமுள்ள முன்வரிசையில் உக்ரைனிய நிலைகளை ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.

கிழக்கு உக்ரைனில் மட்டும் 900 வீரர்கள் வரையில் கொண்டுள்ள 76 ரஷிய படைப்பிரிவுகள், தளவாடங்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் டான்பாஸ் பிராந்தியத்தில் 70 ஆயிரம் ரஷிய துருப்புகள் இருப்பதாக உக்ரைன் மதிப்பிட்டுள்ளது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கிரெமினா நகரின் கட்டுப்பாட்டை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மரியுபோல் நகரம் மீது ரஷிய தாக்குதல் தொடர்கிறது என உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள அஜோவ் உருக்கு ஆலையில் உள்ள பதுங்கு குழிகள் மீது ரஷிய படைகள் குண்டுவீச்சைத் தொடங்கி உள்ளன. இதை அஜோவ் பிராந்திய தேசிய பாதுகாப்பு படை தளபதி டெனிஸ் புரோகோபென்கோ உறுதிப்படுத்தினார்.

பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஆலையில் சுரங்கப்பாதைகள் உள்ளன. அங்கு போராளிகளும், பொதுமக்களும் தஞ்சம் அடைகின்றனர். உருக்குலைந்துபோன நகரத்தின் கடைசி பெரிய எதிர்ப்பு இந்த உருக்கு ஆலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு உக்ரைனில் போலந்து எல்லையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர். அதில் ஒருவர் பெண். 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் அங்கு ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் வெற்றிகரமாக பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை தீவிரமாக போர் நடந்து வரும் வேளையில் உக்ரைன், ரஷியா இடையே போர்க் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

10 ராணுவ அதிகாரிகள் உள்பட 60 படை வீரர்கள், பொதுமக்களில் 16 பேர் என 76 போர்க் கைதிகளை உக்ரைனிடம் ரஷியா ஒப்படைத்துள்ளது. இதை உக்ரைன் துணைப்பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் வெடி மருந்து கிடங்குகள், கட்டளை தலைமையகம், துருப்புகள் மற்றும் வாகனங்கள் உள்பட ஏராளமான ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாக மாஸ்கோ தெரிவித்தது. அதன் பீரங்கிகள் நூற்றுக்கணக்கான உக்ரைனிய இலக்குகளை தாக்கியதாகவும் , துருப்புகள், ராணுவ தளவாடங்கள் மீது 108 தாக்குதல்களை போர் விமானங்கள் நடத்தியதாகவும் ரஷியா கூறுகிறது.

உக்ரைனில் ரஷிய தாக்குதல் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்று ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த மற்றொரு பேட்டியில் உக்ரைனில் ரஷியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது. வழக்கமான மரபுரீதியிலான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறினார்.

கிழக்கு உக்ரைனில் இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதுபோல டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தில் உள்ளது. இது தொடரும் எனவும் கூறினார்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு ரஷிய தாக்குதல்கள் தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்துள்ளார். ஆனால் என்ன விலை கொடுத்தேனும் எதிர்தாக்குதல் நடத்தி போராடப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.

கெர்சன் ராணுவ ஆலையில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் ஒரு சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், உக்ரைனின் பாதுகாப்பு சேவை விட்டுச்சென்ற நாசவேலை குழுக்களை அடையாளம் காண்பதற்கு ரஷிய படைகள் அந்தப் பகுதியில் சோதனைகளை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனுக்கு 4 விமானங்களில் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார். உக்ரைனுக்கு அதிகபட்ச ராணுவ உதவியை அளிக்கிற நாடாக இன்றளவும் அமெரிக்கா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்