உலக செய்திகள்

ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரியாத்,

சவுதி அரேபியாவில் பெண்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் தந்தை அல்லது கணவரிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் ஆணின் துணையின்றி பெண்கள் பாஸ்போர்ட்டு பெறுவதோ, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவோ முடியாது. இந்த பின்னணியில், பாலின அடிப்படையில் ஒடுக்குமுறை நடைபெறுவதாக குற்றம்சாட்டி, சவுதி அரேபியாவில் இருந்து இளம்பெண்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் சம்பவங்கள் அதிகரித்தன. மேலும் பொருளாதாரம், அரசியல், சுகாதாரம் மற்றும் கல்வியில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதை, உலக பொருளாதார பொதுமன்றத்தின் ஆய்வு காட்டியது.

இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்ட தொலைநோக்கு திட்டம், 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றியமைக்கவும், பணிகளில் பெண்களின் பங்கை 22 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்தது. அந்த வகையில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் மற்றும் தியேட்டருக்கு செல்வதற்கும் இருந்த தடைகள் கடந்த ஆண்டு விலக்கப்பட்டன.

இந்த நிலையில், 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் யார் விண்ணப்பித்தாலும் பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் எனவும், 21 வயதுக்கு மேற்பட்ட யாரும் பயணம் மேற்கொள்ள அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சவுதி அரேபிய பெண்கள் ஆணின் துணையில்லாமல் பாஸ்போர்ட்டு பெறவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் முடியும்.

மேலும் குழந்தை பிறப்பை பதிவு செய்யும் உரிமை, திருமணம் அல்லது விவாகரத்தை பதிவு செய்யும் உரிமை, குடும்ப ஆவணங்களை பெறுதல், குழந்தைகளுக்கு காப்பாளராகும் உரிமை உள்ளிட்டவற்றையும் முதல் முறையாக பெண்களுக்கு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.