வாஷிங்டன்,
புதுடெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பு வழியை பயன்படுத்திக்கொள்ள சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏர் இந்தியா தரப்பிலோ அல்லது சவூதி அரேபிய அதிகாரிகளோ இந்த தகவலை உறுதி செய்யவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ இந்த தகவலை வெளியிட்டார். இஸ்ரேலுக்கு சவூதி அரேபியா வான்பரப்பு வழியாக செல்வதற்கான ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா இன்று கையெழுத்திட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால், புதுடெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் பயண தூரம் சுமார் இரண்டரை மணி நேரங்கள் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரை, இஸ்ரேல் செல்லும் எந்த ஒரு நாட்டு விமானத்துக்கும் சவூதி அரேபியா தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை. சவூதி அரேபியாவுடன் இஸ்ரேல் தூதரக ரீதியாக எந்த ஒரு தொடர்பையும் வைக்கவில்லை. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுத விவகாரத்தில், இரு நாடுகளும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டன என்பது கவனிக்கத்தக்கது.