ரியாத்,
ரியாத் அரண்மனையை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுக்குழு தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய தொலைக்காட்சி சேனல்களில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. அரண்மனை குடியிருப்பு வாசிகள், வானத்தில் கரும்புகை வெளியான காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஏவுகணையை இடைமறித்து தாக்கியதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். வோல்கோனா எச்-2 என்ற வகை ஏவுகணை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் குழு செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நவம்பர் 4 ஆம் தேதியும் இதே போன்றதொரு ஏவுகணை தாக்குதலை ஹவுத்தி புரட்சி படையினர் நடத்தியிருந்தனர். கடந்த முறை, சவூதி தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. எனினும், அந்த ஏவுகணையும் இடைமறித்துஅழிக்கப்பட்டது.
ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் வகையில் அவ்வப்போது சவுதி அரேபியா மீது ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.