உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வு

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் மால்கர் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வந்தார்.

லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை மந்திரியும் முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியுமான பீட்டர் டட்டன் களமிறங்கினார். இந்த தேர்தலில் 48 வாக்குகளை பெற்ற மால்கோல்ம் டர்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மிக நெருக்கமான எண்ணிக்கையில் முடிவுகள் இருந்ததாக சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, 2-வது முறையாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக, கட்சி கூட்டத்தை கூட்டிய டர்ன்புலிடம், அவருக்கு ஆதரவு இல்லை என்றும் தலைமையை மாற்ற வேண்டும் என்றும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய புதிய பிரதமராக ஸ்காட் மேரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், ஆளும் கன்சர்வேட்டி கூட்டணி ஆட்சிக்கு இருந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. கன்சர்வேட்டி கூட்டணி அரசாங்கத்தின் பதவிக்காலம் வரும் 2019 மே 19 ஆம் தேதி வரை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 6-வது பிரதமாராக ஸ்காட் மேரிசன் பதவியேற்க உள்ளார்.

முன்னதாக, பிரதமர் மார்கம் டர்ன்புல், கடந்த வாரம் எரிசக்தி தொடர்பான திட்டம் ஒன்றை முன்வைத்தார். அதாவது, பருவநிலை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாசுவை குறைக்கும் நோக்கத்தில் மின் கட்டணத்தை குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், மார்கம் டர்ன்புல்லின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பிறகே, பிரதமர் பதவியை மார்கம் டர்புன்புல் இழந்துள்ளார்.