கொழும்பு,
இலங்கையில் ராஜபக்சே அதிபராக ஆட்சி செய்த போது, ராஜபக்சேவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கா மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 2009 ஆம் ஆண்டு பட்டப்பகலில் சாலையில் சென்று கொண்டிருந்தவரை வழி மறித்த ஒரு கும்பல் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தப்பி ஓடியது. கொழும்பு புறநகரில் நடைபெற்ற கொலைச் சம்பவம், ராஜபக்சே ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு இருந்த நெருக்கடி நிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது என்று அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாக ஓய்வு பெற்ற டிஐஜி பிரசன்னா நானநயக்கராவை சிறிசேனா அரசு தற்போது கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி கல்கிஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது போலீஸ் அதிகாரி நானநயக்காரா ஆவார்.
இலங்கையில் தற்போது ஆட்சி செய்து வரும் சிறிசேனா அரசு, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்களுக்கு எதிரான வழக்குகளை முறையாக கையாள்வது இல்லை என்று அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், புதிய அரசியல் கட்சியை துவக்கி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சே வெற்றி பெற்றார். சிறிசேனா கட்சியின் தோல்விக்கு கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பான நீதி விசாரணையில் மெத்தனம் காட்டியதும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.