நியூயார்க்,
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் செமினோல் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி லூயி. இவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவர் பணியில் இருந்தபொழுது வந்த தொலைபேசி அழைப்பை அதிகாரி ஒருவர் எடுத்துள்ளார். அதில், வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லூயி மற்றும் மற்றொரு அதிகாரி உடனடியாக மீட்பு பணிக்காக சென்றுள்ளனர். சென்ற இடத்தில் அது தனது வீடு என அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.
உடனே செயல்பட்டு, தீ விபத்தில் சிக்கிய வீட்டிற்குள் இருந்த 14 மற்றும் 7 வயதுடைய தனது இரு மகன்களையும் காப்பாற்றி உள்ளார். இதில், அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
எனினும், அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் காப்பாற்றிய குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். லூயியின் 3வது குழந்தை உறவினர் வீட்டில் இருந்துள்ளார்.
தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பே லூயி மனைவி லுரீனா லூயி வேலைக்கு சென்றுள்ளார். லூயி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது வீடு தீ விபத்தில் சிக்கியதில் வீட்டில் இருந்த துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து விட்டன. எனினும், ஆறுதலளிக்கும் வகையில் பலரும் தொலைபேசி வழியே அழைத்து பேசியுள்ளனர். நன்கொடைகள் தருவதற்கும் முன்வந்துள்ளனர்.