ரமல்லா,
பிரதமர் மோடி ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்ட பயணமாக அவர் நேற்று முன்தினம் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதையடுத்து மோடி அந்நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவையும் சந்தித்தார். அப்போது இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று காலை அம்மானில் இருந்து ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் விசேஷ ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரான ரமல்லாவுக்கு சென்றார். அந்த ஹெலிகாப்டருக்கு இஸ்ரேல் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு அளித்தன.
இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் சென்றது இதுவே முதல்முறை ஆகும். ரமல்லா சென்றடைந்ததும், மோடி தனது டுவிட்டர் பதிவில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம். இருநாடுகளின் உறவை இன்னும் வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார்.
ரமல்லாவில் மோடியை பாலஸ்தீன பிரதமர் ஹமதல்லா வரவேற்றார். அதையடுத்து, பாலஸ்தீனத்தை உருவாக்கிய மறைந்த யாசர் அராபத் அடக்கஸ்தலத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் அருகிலுள்ள யாசர் அராபத் அருங்காட்சியகத்துக்கும் சென்று பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிபர் மெகமூத் அப்பாஸ் சார்பில் மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பாலஸ்தீனம் சார்பில் இருநாடுகளின் உறவுக்கு பாடுபட்டமைக்காக கிராண்ட் காலர் என்னும் மிக உயரிய விருதை மோடிக்கு, அப்பாஸ் வழங்கினார்.
பின்னர் 2 தலைவர்களும் இருநாடுகளின் உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச பொதுப் பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையிலும் கல்வி, மருத்துவம், பெண்கள் மேம்பாட்டு மையம் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.325 கோடி) மதிப்பில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.