நியூயார்க்,
அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் ஆன பிறகு சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீக்கியர்களும், கருப்பு இனத்தை சேர்ந்தவர்களும் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர்.
கடந்த 6-ந் தேதி, கலிபோர்னியா மாகாணத்தில் மான்டெக்கா என்ற இடத்தில் 71 வயதான சாகிப் சிங் என்ற சீக்கியர் காலை நேரம் நடைப்பயிற்சிக்கு சென்றபோது இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனான மெக் அல்லிஸ்டர் என்ற வாலிபரும், மற்றொரு சிறுவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த மாதம் 31-ந் தேதி சுர்ஜித் மாலி என்ற 50 வயது சீக்கியர் குடியரசு கட்சி எம்.பி., ஜெப் டென்ஹாமுக்கு ஆதரவாக செயல்பட்டபோது, இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
இந்த நிலையில் அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் டெர்லோக் சிங் என்ற சீக்கியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இவர் அங்கு எசெக்ஸ் நகரில் கிழக்கு ஆரஞ்ச் பார்க்டெலி என்ற இடத்தில் பெரிய அளவில் ஒரு கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக அவர் அங்கு கடையை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு தனது கடையில் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அப்போது அவரை காண சென்று இருந்த நெருங்கிய உறவினர் ஒருவர், டெர்லோக் சிங் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எசெக்ஸ் நகர போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து டெர்லோக் சிங் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையை செய்தது யார், பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட டெர்லோக் சிங் அந்தப் பகுதியில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்திருக்கிறார். அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். தங்கள் குடும்பத்தின் தலைவர் அநியாயமாக குத்திக்கொலை செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் மனம் உடைந்து போயினர்.
3 வார காலத்தில் சீக்கிய சமூகத்தினர் மீது நடந்த மூன்றாவது தாக்குதல் இது. எனவே அந்த சமூகத்தினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சீக்கிய கூட்டணி என்ற அமைப்பு டெர்லோக் சிங் கொலைக்கு அனுதாபம் தெரிவித்து பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளது.