உலக செய்திகள்

சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் இந்தியருக்கு பதவி

சிங்கப்பூரில் அறிவுசார் சொத்துக்கள் சட்ட வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேதார் சிங் கில் (வயது 59) ஆவார்.

சிங்கப்பூர்,

தேதார் சிங் கில்லை சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறை கமிஷனராக நியமித்து அந்த நாட்டின் அதிபர் ஹலிபா யாக்கப் உத்தரவிட்டார்.

கில், வரும் ஆகஸ்டு மாதம் 3ந் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்து எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்ட பட்டம் பெற்றவர் ஆவார்.

அங்கு இவர் ட்ரு அன்ட் நேப்பியர் எல்.எல்.சி. என்ற சட்ட நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்கள் சட்டத்துறையின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து உள்ளார்.

அறிவுசார் சொத்துக்கள் சட்டத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆசிய காப்புரிமை வக்கீல்கள் சங்கத்தின் முன்னணி அறிவுசார் சொத்து வக்கீல் இவர்.

சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை கமிஷனர் பதவி, நீதிபதி பதவிக்கு உரிய அந்தஸ்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.