கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் மொகாதீசுவில் கடற்கரையோரம் அமைந்துள்ள நட்சத்திர ஒன்றில் சோமாலியா காவல்துறை தலைவர் மற்றும் எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டலுக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து ஓட்டலில் தீப்பற்றியது. இதனால் ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பயத்தில் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே சமயம் சோமாலியா காவல்துறை தலைவர் மற்றும் எம்.பி.க்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர்கள் அனைவரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.
இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.