உலக செய்திகள்

சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன அதை வரவேற்கிறோம் - ஈரான்

ஈரான் சரணடைந்த பின் அங்கு தகுதியான, ஏற்கக்கூடிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர் டிரம்ப் கூறியிருந்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை -குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், `Truth' சமூக வலைத்தளத்தில்,

ஈரான் நிபந்தனையற்ற சரணாகதி அடைவது மட்டுமே தீர்வு. ஈரான் அரசுடன் எவ்விதமான சமரசப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. ஈரான் சரணடைந்த பின் அங்கு தகுதியான, ஏற்கக்கூடிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஈரானை அழிவில் இருந்து மீட்டு பொருளாதார வலிமையான நாடாக்குவோம் என அதில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது:-

சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன அதை வரவேற்கிறோம். எங்கள் நாட்டின் கண்ணியம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. ஈரானிய மக்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டு, இந்தப் போரைத் தொடங்கியவர்களிடமே மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார்.