சியோல்,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, தென் கொரியா அதிபர் மூன் ஜேய்-இன் முதன்முதலாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார் என தென் கொரிய அதிபர் அலுவலகமான ப்ளூ ஹவுஸ் தெரிவித்துள்ளது.
தென் கொரியா அதிபர் மூன் ஜேய்-இன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர் பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.
இந்த 4 நாட்கள் சுற்றுப் பயணத்திற்கு பின் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேய்-இன், சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தென் கொரியா 1973- ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.