உலக செய்திகள்

கண்டியில் சிங்களர்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோதல், இலங்கை அவசரநிலை பிரகடனம்

கண்டியில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்ததை அடுத்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. #SriLanka #Emergency #KandyViolence

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் மதமோதல்கள் பரவிவரும் நிலையில் 10 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதவாத மோதல்களை தூண்டி விடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கும் விதமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் கடந்த ஒரு வருடமாகவே இருதரப்பு இடையேயும் பதட்டமானது அதிகரித்து காணப்பட்டது. இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக மக்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார்கள், பெளத்தர்களின் வரலாற்று இடங்களை சிதைக்கிறார்கள் என சில பெளத்த குழுக்கள் குற்றம் சாட்டி வருகிறது. இலங்கையில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக அடைக்கலம் கோருவதற்கு எதிராக பெளத்தர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தயாசிறி ஜெயசேகரா பேசுகையில், சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, அதில் இலங்கையின் பிற பகுதிக்கும் மதவாத மோதல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் 10 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது, என கூறிஉள்ளார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. பேஸ்புக் வழியாக வன்முறையை தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

கண்டி தீ வைப்பில் இஸ்லாமியர் உயிரிழப்பு

கண்டியில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்தது. கண்டியில் இஸ்லாமியருக்கு சொந்தமான கடையில் கும்பல் தீ வைத்து உள்ளது. நேற்று மாலையில் இருதரப்பு இடையிலான மோதலானது அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றபோது சாம்பலில் இருந்து இஸ்லாமியர் ஒருவரின் சடலத்தை எடுத்து உள்ளது. இதனால் நிலைமை மோசம் அடைந்ததை அடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டது. நிலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கண்டியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் நடந்த கும்பல் தாக்குதலில் சிங்களர் ஒருவர் உயிரிழந்து உள்ளார், இதனையடுத்து நேற்று வெடித்த வன்முறை சம்பவங்களில் இஸ்லாமியர்களின் வீடுகள், வணிக மையங்கள், மசூதிகள் பெரிதும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. 21 மில்லியன் மக்கள் கொண்ட இலங்கையில் பெளத்தர்கள் பெரும்பான்மை மக்களாக வாழ்கிறார்கள், இஸ்லாமியர்கள் 10 சதவிதம் பேர் உள்ளனர். கண்டியில் மோதல் வெடித்தது தொடர்பாக விசாரணைக்கு பின்னர் 20-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர், விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்புவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் கிழக்குப்பகுதியில் கடந்த வாரம் இஸ்லாமிய சமையல்காரர் சிங்களர்களுக்கு கருத்தடை பொருட்கள் அடங்கிய உணவுப்பொருட்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதனையடுத்து இஸ்லாமியர்களின் வணிக மையங்கள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நேரிட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். மதவாத முரண்பாடுகளை பரப்புவதாக சில பெளத்த தலைவர்கள் விசாரணையை சந்தித்த போது, பெளத்த குழுக்களால் வன்முறை அப்போது தூண்டப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு