கொழும்பு,
இலங்கை பொருளாதார நிலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது.
எங்கெங்கும் வறுமை... பசி... பட்டினி... என்று மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
2.2 கோடி மக்களைக் கொண்ட தெற்காசிய நாடு 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மின் தடையும் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை இயக்க அங்கு போதிய நிலக்கரி இல்லை. நிலக்கரி உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யவும் வழி இல்லை. அதேபோல் நீர் மின் நிலையங்கள், மற்ற மின் நிலையங்களை இயக்க எரிபொருள் இல்லை.
இந்த நிலையில் தான் தற்போது அங்கு மின்தடை தினமும் 10 மணி நேரம் என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் 7 மணி நேரம் என்ற அளவில் இருந்த மின் தடை தினமும் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 750 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதுதான் மின் தடைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
13 மணி நேர தினசரி மின்வெட்டுகளை சந்திக்க வேண்டி உள்ளது. பல மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தீர்ந்து விட்டதால் வழக்கமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக போரட்டங்கள் நடந்து வருகின்றன. இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் மகிந்த ராஜபக்சே என்ன நடந்தாலும் தான் பதவி விலக மாட்டேன் என்று கூறியுள்ளார். எனக்கு இன்னும் ஆட்சி செய்ய காலம் இருக்கிறது.
இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் நாங்களே வெல்வோம். எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த பிரச்சினையை சரி செய்வோம் என்று மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டு இருக்கிறார். மகிந்த ராஜபக்சே பொருளாதாரம் பற்றி பேசாமல் இப்படி தேர்தல் பற்றி பேசியதை அந்நாட்டு மக்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்சவின் பேஸ்புக் பக்கத்தில், அதில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வழக்கம் போல நாள் தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், மக்கள் கருத்துகளை பதிவிடும் வசதி மட்டும் அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.