கொழும்பு,
இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை 25-30% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.398, டீசல் ரூ.382, மண்ணெண்ணெய் ரூ.255 ஆக விற்கப்படுகிறது. மேற்காசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலித்துள்ளது.
இலங்கை அரசு கடந்த வாரம்தான் பெட்ரோல், டீசல் விலையை சுமார் 8 சதவீதம் உயர்த்தி இருந்தது. தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தின் சில்லறை விற்பனையில் கட்டுப்பாடுக்ளும் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மீண்டும் அங்கு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி சார்ந்த நாடான இலங்கை, ஏற்கனவே கடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் பிந்தைய சூழலில் பாதிப்புகளை இன்னமும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் போர்சூழலால் அங்கு எண்ணெய் விலை அதிகரித்து இருப்பது கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.