கொழும்பு,
இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்குள்ள 2.1 கோடி மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில் 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடுவதை அரசு இலக்காக வைத்திருப்பதாகவும் இலங்கை மருந்தகத்துறை மந்திரி சன்னா ஜெயசுமனா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அதே நேரம் இந்த தடுப்பூசி பணிகளை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமல் இலங்கை சுகாதாரத்துறை தவித்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி கொள்முதல் மற்றும் பயன்பாட்டுக்கு அதிக நிதி தேவைப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது. எனவே தடுப்பூசி பணிகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.730 கோடி) நிதியுதவி வழங்க சர்வதேச நிதியத்தில் இலங்கை விண்ணப்பித்து இருக்கிறது. 1.4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசி கொள்முதல் செய்யவும், பிற பணிகளுக்காகவும் இந்த நிதியை கோரியுள்ளது.
இலங்கையின் இந்த கோரிக்கையை சர்வதேச நிதியமும் ஏற்றுக்கொண்டு இந்த தொகையை வழங்க சம்மதித்து இருப்பதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.